Sunday, December 16, 2012

கைபேசி என்றொரு காதலி

இரட்டை சிம் கொண்ட என் முதல் மனைவி...

நான் சொல்வதை எல்லாம்
மொழிப்பதிவு செய்யும்- என்
முதல் மாணவி.

என் காதலிக்காய் நான்
கொடுத்த முத்தங்களை...
திருடி வெறும் சத்தத்தை மட்டும்
கொண்டு சேர்க்கும் என்
கள்ளக் காதலி!

அதிகமாய் பேசினால்
எரிச்சலடைந்து எச்சரிப்பாள்
'Low  Battery' என்று!
மீறிப் போனால்
மூர்ச்சையடைவாள்
'Switched off' என்று!

யேசுதாஸையும், மைக்கில் ஜாக்சனையும்,
இளையராஜாவையும், எம்.ஜி.ஆரையும்,
பக்கத்தில் அமர்த்தி
பாடச் செய்யும்
கலை சேவகி.

நாட்களுக்குள்
என் ஞாபகங்களை- நான்
புதைத்து வைக்க
"ஜானகி"யாய் வெளிப்படுவாள்
'Reminder' என்று!

 நகர்ந்து நின்றாலும்
நாலடி நகர்ந்தாலும்
தொப்புள் கொடியாய்
தொட்டு கொண்டே இருப்பாள்
'Head phone' வாயிலாக!

தன் நீலப் பற்களால் எனக்காய்
நிறைய சேகரித்து வைத்தவள் 'Bluetooth'.

என் எண்ணங்களையும்
ஏளனங்களையும்
ரகசியமாய்
பரிமாற்றம் செய்வாள்
SMS என்று.

காதலி, எனக்காய்  பாடிய பாடலை
கற்பு கெடாமல் பதிவு செய்வாள்
Voice Recorder ல்.

அண்ணன் குழந்தையும்
தங்கை குழந்தையும்
முத்தமிட்ட
களங்கமில்லா எச்சில்களை
இவள் கண்ணடித்து
சேமித்து வைப்பாள்
'Camera' வில்.

"இன்னும் தூங்காம என்னடா பண்ற?
அந்த செல்லை ஒடைச்சு எறிஞ்சாதான்
  நீ ஒழுங்கா இருப்ப" : என் அம்மாவுக்கு பயந்து
 என் போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் குட்டி ராட்சசி...

பேசகூடாது என்று நான் இட்ட கட்டளையை மீறாமல்
தொடர்புகளின் தொந்தரவை
அதிர்வுகளால் தெரிவிப்பாள்
தன்னை பூகம்பத்தில் ஆழ்த்திக்கொண்டு
'Vibrate mode'.

இந்த கள்ளக் காதலி உதவியால்
கரம் பிடித்தேன் காதலியை
தாலி கட்டும் போது  உரக்க கத்தி ஊரையே
கூட்டிவிட்டால் ...  'Incoming Call'.

இன்று பள்ளியறையில் நண்பனின் வாழ்த்துக்கு
 நன்றி SMS செய்து கொண்டிருக்க...
பக்கத்தில் இருந்த மனைவி எரிச்சலில்...
இந்த  செல்லையே  கட்டிக்கிட்டு அழுவுங்க.,
நான் தூங்கறேன்...
கண்ணடித்தாள் என் கள்ளக் காதலி.