Friday, January 20, 2012

இந்தியா: என் கனவில்

நித்திரையின் கனவுதான்- இவை
நிஜமான ஆசை தான்...
கனவில் கண்ட என் நாட்டில்...  

களவு இல்லை கணம் கூட,  
அங்கு  
கோட்சேவே காந்தியானார்,
காந்தியோ கடவுளானார்...
கங்கை  தமிழ்நாட்டில் கரை புரண்டு ஓடுகிறது,
காவிரி கல்கத்தாவில் காட்டாறாய் பாய்கிறது...
லஞ்சத்தை  தேடினேன்,
வஞ்சத்தை தேடினேன்,
மிஞ்சியது அலைச்சல் மட்டுமே...
நட்சத்திரமாய் இருந்த முன்னேற்றம்,
நகக்கண்ணாய் ஒட்டிவிட்டது-என் நாட்டுடன்.
தெய்வங்கள் பற்பல,
சாதியில்லை பேதமில்லை,
சம்பிரதாய சடங்கில்லை,
பசி என்ற சொல்லே கிடையாது,  
பரதேசியை பார்க்க முடியாது,
பாமரனுக்கும் சிம்மாசனம்,
பாவிக்கும் பேரன்பு,
துரோகிக்கு மட்டும் தூக்கு தண்டனை,
வழக்குகள் தங்கா நீதிமன்றங்கள்,
வாய்ப்புகள் குறையா வேலைகள்,
பிறப்பில் தாழ்வில்லை பிரிவினை வாதமில்லை,
கட்சிகள் இரண்டு மட்டும், காட்சிக்கு அதிசயம் குறைவில்லை,              
எத்தனையோ கோவில்கள்,
அத்தனையும் பள்ளிக்கூடம்!
எத்தனையோ வியாபாரம், 
அத்தனையிலும் முன்னேற்றம்!
என் நாட்டில்
தினமும் மனிதர் புதியதாய் பிறக்கிறார்,
திறமை  உள்ளோர் மட்டும் இருக்கிறார்...
மருத்துவத்திலும் முன்னேற்றம்,
வானத்திலே எழுதப்பட்டுள்ளது ,
இந்தியா வல்லரசு  என்று...
போலிச்சாமி தொல்லையில்லை,
போர்கள் என்றச் சொற்களில்லை,
யாவுமே அமைதி எதிலுமே சமரசம்...
ரசிகர் மன்றம் ஒன்றில்லை,
ரகளை கலவரம் காணவில்லை,
ஏழை மட்டுமே அரசியல்வாதி,
மக்களாட்சியில் குறையில்லை,
கள்ள ஓட்டுக்கு ஆளில்லை,
முழுமையான வாக்குப் பதிவு- அதில்
முறையான மந்திரிசபை!
எனக்கும் கிடையாது,
உனக்கும் கிடையாது,
நமக்கு மட்டுமே எதுவும் உண்டு.
இரண்டே இனம்,
இன்பம்  மட்டும்  கொண்டதே...
 என் இந்தியா.



Thursday, January 12, 2012

தனிமை

தனிமை சுகம்,
தனிமை பலம்,
தனிமை ஞானம்.

நீ உன்னையே மறக்க வேண்டுமா?
உலகையே ஒரு புள்ளியாக்கணுமா?
தனிமையில் இரு.

மரணத்தை விலைக்கு வாங்கி,
ஜனனத்திடம் விற்கலாம்.,








நாம் மனிதன் என்பதன் காரணம் அறியலாம்,
ஆழ் கடல் ஆழம் முதல்
அண்டத்தின் தோற்றம் வரை
யோசிக்க வேண்டுமா?
தனிமையில் இரு.

காதலில் குதித்து கானம் பாட,
காதலை வெறுத்து கண்ணீர் சிந்த,
தனிமையில் இரு.

தாயிடம் மகிழ்வாய் பேச வேண்டுமா?
தந்தையுடன் ஓடி ஆடி விளையாடனுமா?
தனிமையில் இரு.
  
ஆம்...
தனிமை சுகம்,
தனிமை பலம்,
தனிமை ஞானம்.

நீ சோதனைகளையே சிந்திக்க சோதனைகள் போதும்,
காதலையே சிந்திக்க பெண்கள் போதும்,

மரணத்தையே சிந்திக்க மரணம் போதும்,
மகிழ்ச்சியை சிந்திக்க வெற்றிகள் போதும்,

உன்னை நீ  நினைக்க,
உன்னை  நீ  நேசிக்க,
உன்னை  நீ  அறிய,
தனிமையில் இரு.

உண்மையாய் சொல்கிறேன்...

தனிமை சுகம்,
தனிமை பலம்,
தனிமை ஞானம்.

வாருங்கள் சிறிது நேரம் தனிமையில் இருப்போம்...

சொர்கத்தை நோக்கி...

ஓ நாணல்களே!
ஒரு முறை தலையாட்டுங்கள்
நான் கவிதை எழுதப் போகிறேன்... 
நாணல்  தலையசைக்க, கையில் கவிதை!

ஓ மேகங்களே!
ஒரு முறை தூறல் போடுங்கள்
நான் நீராட போகிறேன்...
மேகம் மழை தூவ, நீரோடு தேகம்!

ஓ குயில்களே!
ஒரு முறை கூவுங்கள்  
நான் பாட போகிறேன்...
குயில் மகள் கூவ, குட்டி ராகம் என் நாவில்!

ஓ இளங்காற்றே!
ஒரு முறை வீசு
நான் ஓய்வெடுக்க போகிறேன்...
இளமகன் இளைப்பாற, இளங்காற்றின் தாலாட்டு!

ஓ செந்தமிழே!
ஒரு முறை கவிதை சொல்
நான் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்...
செந்தமிழ் கவி பாட, சொர்கத்தை நோக்கி நான்...!

மகிழ்ச்சி

கண்ணோடு கண் பேச,
கரங்களோடு  கரம்  இணையும்  
அந்த நேரம் மகிழ்ச்சி...

கூந்தல் முடி இழுத்து- தலையில் குட்டி
தண்ணீர் துடைத்த
அந்த நேரம் மகிழ்ச்சி...

மழையோடு காவிரியில் மண் அள்ளி
பூசிக்கொண்டு உடல் நனைத்த  
அந்த நேரம் மகிழ்ச்சி...

இரவோடு இரவாக,
இளங்காத்து வரவாக,
இமை மூட தயாராகும் 
அந்த  நேரம் மகிழ்ச்சி...

கை கொண்ட கரியோடு,
கணவனின் சட்டை மாட்டும்
கணிமகளைக்  கண்ட  
அந்த நேரம் மகிழ்ச்சி...

மகிழ்ச்சிகளை குவியலாக்கி,
மலைபோல உருவாக்கி,
ஒட்டு மொத்த தானம்
மழலை அழுத 
அந்த நேரம் மகிழ்ச்சி...