Sunday, January 9, 2011

இவன்

பிறலாத பருவங்களில் 
தளராத முயற்சி 
இவன் இளமை!
கருக்களுக்கு 
கரு தந்த 
கர்ப்பக் கிரக கரு இவன்! 
மேகங்கள் மலர் தூவ 
மின்னலால் வாரி கொடுக்கும் 
மழை போன்றவன்! 
மழை என்பது இவன்
என்ற மூன்றெழுத்தின் குறைப்பு!
எரிகின்ற தீபத்தின் 
ஒளி இவன்!
எட்டாத வானத்தின் 
பூமி இவன்!
வாடாத மலர்களின் 
வாசனை இவன்!
தேடி கிடைக்காத 
நினைத்தால் தோன்றும் 
எல்லாம் இவன்!
இவன் என்னை போல்
உன்னை போல் 
மனிதன் தான்., 
அந்த இறைவனுக்கும் 
இவன் மேல் கொஞ்சம் 
அச்சம் தான்!
பொய்களில் இவன் மௌனம்,
நேர்மை இவன் வாதம்,
இரண்டே போதும் 
இவன் மனிதன் என்றிட!
துரோகத்தில் மறதி,
துரோகிக்கு மன்னிப்பு,
இவையே போதும் 
இவன் இறைவன் என்றிட! 
மேனி சிலிர்த்திட பெய்யும் மழையில் 
சுடர் விட்டெரியும் 
ஜோதி இவன்!
தவறினை தட்டி கேட்கும் 
உறவுக்கு உயிர் கொடுக்கும் 
ஜாதி இவன்!
வானம் உயரமாய் இருப்பது 
இவன் வதனம் காண! 
விடியாத இரவுகளில் 
மின்மினி இவன்!
முடியாத காரியத்தின் 
முன்னேற்றம் இவன்! 
இறைவன் என்பவன் இவன் தான் 
இவன் என்பதும் நான் தான்....

Saturday, January 8, 2011

காதலன் வர்ணனை!

கண் இமைகளின் அஸ்தமனத்தில்
கனவின் உதயம்.,
அங்கு ராகு காலம், எம கண்டம், குளிகை காலம்
என எத்தனையோ உண்டு
நல்ல நேரம் மட்டும் அவள் வருகையின் போது!
கற்சிலைகள் கூட இலவம் பஞ்சாய்
அமுங்கியது - அவள் கன்னம்.,
மூன்று லோகங்களும் ஒரே
உருண்டையில் - அவள் கண்கள்.,
பாதுகாப்பு பெட்டகத்தின் முனையில்
கூட முட்கள் - அவள் இமைகள்.,

அம்பு எய்ய முடியாத 
வில் - அவள் இதழ்.,
எங்கும் நிறைந்த காற்று சொர்கத்திற்கு
சென்று திரும்பியது - அவள் சுவாசம்.,
தேவையின்றி வந்த பொருள்
தேவலோக ஆராய்ச்சிக்கு - அவள் நகம்.,
எத்தனையோ ஆறுகளுக்கு
இடை பாலம் - அவள் முடி.,
பசும் பால் திரிந்து
திடமானது - அவள் பற்கள்.,
இரும்பாய் இருந்த என் மனது
எளிதாய் நொறுங்கி விட்டது
அவள் சிரிப்பில் மட்டும் அல்ல
அவளை சிந்தித்த போதும் கூட...
அன்று அவள் எட்டி உதைத்த பந்து
இன்று வெண்ணிலாவாய்.,
அவளை சிந்திக்க வைத்த எழுத்துக்கள்
இன்று கீதையாய்.,
உலகின் எண்ண முடியாத உயிர்களும்
ஒரு வட்டத்தில் கூடியது
அவள் வதனம் காண.,
அவள் கோப பார்வையில் வீழ்ந்து எறிந்தவன்
இன்று சூரியனாய்.,
அவள் ஊதிய போது
சுற்ற தொடங்கின
இன்னும் நிற்கவில்லை கோள்கள்.,
விண்கலம் கூட பார்த்ததில்லை
அவள் பறக்கும் உயரத்தினை.,
மீன்கள் கூட மிஞ்சியதில்லை
அவள் சுறுசுறுப்பை.,
எறும்பு கூட எழுந்து நிற்கும்
அவள் ஒழுக்கத்திற்காக.,
மனோரஞ்சிதமும்  மனமுடையும்  அவளை
முகர்ந்து பார்த்தால்.,
அரவுகளும் அஞ்சி விட்டன
அவள் விழிகளின் வண்ணம் கண்டு.,
பூமியில் தோன்றிய பல கடல்கள்
அவள் வாய் கொப்பளித்த நீரால்
கம்பனுக்கும் ஆற்றலில்லாததால்
ஒதுங்கி விட்டான் அவளை வர்ணிக்காமல்
பிரம்மன் சூளுரை ஏற்றான் பொறாமையில்
இனியும் அவளை மண்ணில் படைக்க கூடாதென்று!
எத்தனையோ கருவிகள் மறைந்தது
அவள் கான கடலில் மூழ்கியதால்.,
ராகங்களுக்கே ராகம்
அவள் பெயரின் வடிவம்
என் மீது இறைவன் காட்டும் பேரன்பிற்கு
சரியான உதாரணம்
அவள் படைப்பு.

நான் வசிக்க!

கோடை கால வெப்ப மேகம்
என்னை மட்டும் குளிர வைக்க
கொடைக்கானலிலே சிறு குடிசை
அறைகள் முழுவதும்
அழகிய ஓவியங்கள்
நான் சிரித்திட சிரிக்கவும்
அழுதிட தேற்றவும்
அழகாய் ஒரு பதுமை
பல் துலக்க கிளை காம்பு
பசி அகற்ற வடித்த சோறு
அடிக்கடி மாங்காய் குழம்பு
அவ்வப்போது தேங்காய் சோறு
அகம் மகிழ குயிலோசை
அடிக்கடி புல்லாங்குழல் இசை
ஒரே ஒரு வானொலி
முழுக்க முழுக்க கண்ணதாசன் பாடல்கள்
திரும்பும் இடமெல்லாம் புத்தகம்
அதில் வாழ்வை உணர்த்தும்
வானார்ந்த வரிகள்
மலைமேல் ஓர் ஆலயம்
அங்கு மாலை மட்டும் வழிபாடு
வறுமையை தேடி தேடி நோக வேண்டும்
அடிக்கடி அழ, அழகாய் காதல் தோல்வி
அனைவரும் பொறாமை கொள்ள
அடுக்கடுக்காய் வெற்றிகள்
வேப்ப மரம் குடை சாய
குறுக்கே ஒரு ஆறு
அதில் எபோதும் பச்சை பசேல் என
குளிர்ந்த நீரு
மின்சாரமில்லாமல் விளக்கெரிய
பழைய கால வழக்கில் தீ பந்தம்
விடிய விடிய எழுதி படித்து
அதிகாலை உறங்கிட வேண்டும்
வெண்பனி குளிர் காற்று
ஜன்னலை கடந்து
தேகம் தொட வேண்டும்.
நீல நிற கம்பளி கொண்டு
இழுத்து போர்த்தி
இன்னும் கொஞ்சம் தூங்க வேண்டும்
எழுந்திருங்கள்! என்று கூற பாவை
அவளை இழுத்தணைத்து
இதழ் முத்தம் கொடுத்து
திட்டு வாங்கி துயில் கலைக்க வேண்டும்
கண் திறந்தாள் காண ஒரு
அழகிய வதனம்
மஞ்சள் முகத்தின் புருவ கோட்டிடையில்
பொட்டு வைத்த பொன் முகம்
எழுந்த உடன் படிக்க ஓரிரு வரியில்
என் தமிழ் வாசகம்
தமிழை போற்றி பேசும்
பேச்சை கேட்டு கொண்டே
நாளிதழ் புரட்டல்
தண்ணீரில் நீராடிட
தாலேலோ பாடல்
தலை முதல் கால் வரை
சோப்புக்கட்டி தேய்க்கும் போது
இளையராஜா பாடல்
குளித்து தலை துவட்டி நடந்து வர
ரகுமான் பாடல்
துணியுடுத்தியவுடன் கை கழுவிட
தட்டில் குவளைச் சோறு
தொல்லையில் சுகமான தோழமை
அவ்வப்போது சிறு சிறு சண்டைகள்
எல்லோரும் ஒன்றாய்
தென்னந்தோப்பில் தேங்காய் பூ
திண்ணுகொண்டே அரட்டை
தமிழில் பாடி, எழுதும் போதே மரணம்....

அங்கே ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்


புல்லில் தொடங்கிய சித்த மருத்துவம்
புழுவுடன் தொடர்ந்த நுண்ணுயிரியல்
அளவுகள் காட்டும் இயற்பியல் 
அழகாய் விளங்கும் வேதியியல்
புவியியல், மண்ணியல், 
பொருளியல், புள்ளியியல், 
வணிகவியல், வானவியல்,
பெண்ணியல் என 
துண்டு துண்டு இயல்கள் இருந்தும் 
துரும்பாய் தேய்ந்தது நம் நாடு 
நண்பா நீயும் யோசித்திடு ...
வளங்கள் நிறைய புதைந்திருந்தும் 
வானளவு திறனிருந்தும் 
வளரவில்லையே தேசம் 
வரி பணம் எல்லாம் நாசம் 
பொதுநலம் பொதுநலம் பொதுநலம் என்று 
பேசுபவர் மிகவும் மோசம் 
கையில் காசை கொண்டு 
கல்வியை தந்து 
தரிக்கிறார் வெளியில் வேஷம்
கர்ம வீரர் கொள்கை எல்லாம் 
கருகி போனதைய்யா
காசால் மட்டும் கல்வி என்று 
கேவலம் வந்ததைய்யா
நகரங்களெல்லாம் நரகமாகிட 
நாகரிகம் வளர்ந்துவிட்டது 
இங்கே திறமைகள் எல்லாம் 
திண்ணை கல்வியில் மழுங்கி ஒடுங்கி விட்டது
ஒடிந்த தேசம் நிமிர்ந்திட 
ஓங்கிய சுயநலம் தகர்ந்திட 
பசித்த வயிறெல்லாம் புசித்திட 
பச்சை வயலெல்லாம் செழித்திட 
அறியாமை இருள் அகன்றிட 
அந்நிய மோகம் அறுபட 
உறவுகள் உயரமாய் பறந்திட 
உணர்ச்சிகள் உருவம் கண்டிட 
கல்வி மட்டுமே வழியடா
இதை கருத்தில் புகுத்தி 
நினைவில் நிறுத்தி 
செயலில் திருத்தி நடத்தடா...
கல்வி எதையும் செய்யாது- அதை 
கற்றவனால் தான் சாத்தியம்
பணத்தால் செழித்தவன் பசி அறிய மாட்டான் 
வெறும் பாடம் மட்டும் படித்தவன் 
நிலை அறிய மாட்டான் 
வாய் பேச்சாய் இருக்கும் வல்லரசு திட்டம் 
நாம் வாழும்போதே தேசம் அடைந்திட 
பஞ்சத்தில் திளைத்த ஏழைக்கு 
பசியில் சோறு போடு,
வளம் இருந்தும் வருந்தும் நம் நாட்டுக்கு 
கல்வி போடு 
ஆம்., 
முதலில் ஏழைக்கு எழுத்தறிவி- பின் 
இந்தியா எடுக்கும் புதுப்பிறவி! 

நானும் காட்டு வாழ்வும்

நானும் காட்டு வாழ்வும்
பச்சை கிளிகள் கையிலே
கானக் குயிலோ கிளையிலே
பசும்புல் மேயும் ஆட்டுக்குட்டி
அழகாய் அமர்ந்திடும் அருகிலே
ஆறு மணிக்கு அலாரமாய் கூறும்
சேவல் அவனது மணையாட்டி
அந்த கொக்கரிக்கும் கோழி
 கண்ணாடி போன்ற நீர்போக்கு
கரையெல்லாம் செண்பகப்பூ
ஆங்காங்கே வேப்ப மரம்
அழகிய புன்னை மரம்
அமர்ந்த உடனே தூங்கச் சொல்லும்
அடர்ந்த தூங்கு மூஞ்சி மரம்
எப்போதும் நிசப்தம்
அவ்வப்போது மனித ராகம்
பேச நினைத்தால் குயில் கூவல்
பார்க்க நினைத்தால் மயில் ஆட்டம்
உறங்க நினைத்தால்
ஒய்யார தாலாட்டு
மண் வெட்டி கொண்டு மலையை சமப்படுத்த
உடன் வேண்டும் குதிரைகள்
உடைத்த பாறை உருட்டி தள்ள
தந்தம் கொண்ட இரு யானைகள்
உறங்கும் என்னை எழுப்பலாகாது
ஆனால் என்னை உறங்கச் சொல்லலாகாது
பசியும் வசியும் தொடர்ந்து கொண்டே வேண்டும்
உணவும் செழிப்பும்
இருந்த இடம் நிலைக்க வேண்டும்...

பாரதிதாசனுடன்...

மரமிடை வாழும் தேனும்
மாங்கனி தரும் சாறும்
நனி பசு நல்கிய நெய்யும் 
அதன் கூட்டணி அமைந்த பருப்பும் 
தேனுடன் கலந்த சுளையும்
பாகிடை வெந்த அதிரசமும்
வெண்ணை வீழ்ந்த விளக்கின் வினைபோல் 
எண்ணெயில் வெந்த இனிப்பின் வடையும் 
இனியன என்பேன்.,
எனினும் காதலை என்னுயிர் என்பேன். காண்பீர். 

என் சந்தேகம்!

கடவுளே! 
உனக்கு நிறமுண்டா?
படங்களில் கண்டதால் சந்தேகம்
இறைவனே!
உனக்கு உருவமுண்டா?
சிலைகளை கண்டதால் சந்தேகம்
பரம்பொருளே!
உனக்கு பயமுண்டா?
திரைப்படங்களை கண்டதால் சந்தேகம்
ஆண்டவனே!
நீ உண்மையில் உண்டா?
மூடபழக்கங்களை கண்டதால் சந்தேகம்
ஆயினும் "உன்னையே சிந்திக்கிறேன்"...

Wednesday, January 5, 2011

வேண்டும் வரம்

இறைவா!
முள்ளில் படுக்கை கொடு
    சுகமாய் ஏற்கிறேன்.,
ஆணியில் காலணி கொடு
  ஆனந்தமாய் அணிகிறேன்.,
தாகம் தீர்க்க
சாக்கடை நீர் கொடு
    தவிற்காமல் குடிக்கிறேன்.,
பசித்த வயிறுக்கு
பச்சிலை கொடு
    மீதி வைக்காமல் உண்கிறேன்.,
சோகத்தை ஏற்று,
துயரத்தை அணிந்து, 
வஞ்சத்தை குடித்து,
பாதகம் உண்கிறேன்., 
"என் பாரதத்தை உயர்த்துவாயானால்"....

அம்மா

             எத்தனையோ சொற்களை உளமார கூறினேன்.,
                அதற்கு உதட்டில் மட்டுமே முயற்சி...
             அம்மா என்று உதடார கூறினேன்.,
                 உள்ளத்திலும்  உணர்ச்சி!

துவக்கம்

அன்பன்.
இதில் வருபவை என் சிந்தையிலிரிந்து
 சிதறிய வார்த்தைகள்...
இவை எல்லோருக்கும் இன்பம் தந்தால்
இரட்டிப்பு மகிழ்ச்சி.,
ஏதேனும் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்கிறது என் உணர்ச்சி...