Saturday, January 8, 2011

காதலன் வர்ணனை!

கண் இமைகளின் அஸ்தமனத்தில்
கனவின் உதயம்.,
அங்கு ராகு காலம், எம கண்டம், குளிகை காலம்
என எத்தனையோ உண்டு
நல்ல நேரம் மட்டும் அவள் வருகையின் போது!
கற்சிலைகள் கூட இலவம் பஞ்சாய்
அமுங்கியது - அவள் கன்னம்.,
மூன்று லோகங்களும் ஒரே
உருண்டையில் - அவள் கண்கள்.,
பாதுகாப்பு பெட்டகத்தின் முனையில்
கூட முட்கள் - அவள் இமைகள்.,

அம்பு எய்ய முடியாத 
வில் - அவள் இதழ்.,
எங்கும் நிறைந்த காற்று சொர்கத்திற்கு
சென்று திரும்பியது - அவள் சுவாசம்.,
தேவையின்றி வந்த பொருள்
தேவலோக ஆராய்ச்சிக்கு - அவள் நகம்.,
எத்தனையோ ஆறுகளுக்கு
இடை பாலம் - அவள் முடி.,
பசும் பால் திரிந்து
திடமானது - அவள் பற்கள்.,
இரும்பாய் இருந்த என் மனது
எளிதாய் நொறுங்கி விட்டது
அவள் சிரிப்பில் மட்டும் அல்ல
அவளை சிந்தித்த போதும் கூட...
அன்று அவள் எட்டி உதைத்த பந்து
இன்று வெண்ணிலாவாய்.,
அவளை சிந்திக்க வைத்த எழுத்துக்கள்
இன்று கீதையாய்.,
உலகின் எண்ண முடியாத உயிர்களும்
ஒரு வட்டத்தில் கூடியது
அவள் வதனம் காண.,
அவள் கோப பார்வையில் வீழ்ந்து எறிந்தவன்
இன்று சூரியனாய்.,
அவள் ஊதிய போது
சுற்ற தொடங்கின
இன்னும் நிற்கவில்லை கோள்கள்.,
விண்கலம் கூட பார்த்ததில்லை
அவள் பறக்கும் உயரத்தினை.,
மீன்கள் கூட மிஞ்சியதில்லை
அவள் சுறுசுறுப்பை.,
எறும்பு கூட எழுந்து நிற்கும்
அவள் ஒழுக்கத்திற்காக.,
மனோரஞ்சிதமும்  மனமுடையும்  அவளை
முகர்ந்து பார்த்தால்.,
அரவுகளும் அஞ்சி விட்டன
அவள் விழிகளின் வண்ணம் கண்டு.,
பூமியில் தோன்றிய பல கடல்கள்
அவள் வாய் கொப்பளித்த நீரால்
கம்பனுக்கும் ஆற்றலில்லாததால்
ஒதுங்கி விட்டான் அவளை வர்ணிக்காமல்
பிரம்மன் சூளுரை ஏற்றான் பொறாமையில்
இனியும் அவளை மண்ணில் படைக்க கூடாதென்று!
எத்தனையோ கருவிகள் மறைந்தது
அவள் கான கடலில் மூழ்கியதால்.,
ராகங்களுக்கே ராகம்
அவள் பெயரின் வடிவம்
என் மீது இறைவன் காட்டும் பேரன்பிற்கு
சரியான உதாரணம்
அவள் படைப்பு.

No comments:

Post a Comment