Saturday, January 8, 2011

அங்கே ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்


புல்லில் தொடங்கிய சித்த மருத்துவம்
புழுவுடன் தொடர்ந்த நுண்ணுயிரியல்
அளவுகள் காட்டும் இயற்பியல் 
அழகாய் விளங்கும் வேதியியல்
புவியியல், மண்ணியல், 
பொருளியல், புள்ளியியல், 
வணிகவியல், வானவியல்,
பெண்ணியல் என 
துண்டு துண்டு இயல்கள் இருந்தும் 
துரும்பாய் தேய்ந்தது நம் நாடு 
நண்பா நீயும் யோசித்திடு ...
வளங்கள் நிறைய புதைந்திருந்தும் 
வானளவு திறனிருந்தும் 
வளரவில்லையே தேசம் 
வரி பணம் எல்லாம் நாசம் 
பொதுநலம் பொதுநலம் பொதுநலம் என்று 
பேசுபவர் மிகவும் மோசம் 
கையில் காசை கொண்டு 
கல்வியை தந்து 
தரிக்கிறார் வெளியில் வேஷம்
கர்ம வீரர் கொள்கை எல்லாம் 
கருகி போனதைய்யா
காசால் மட்டும் கல்வி என்று 
கேவலம் வந்ததைய்யா
நகரங்களெல்லாம் நரகமாகிட 
நாகரிகம் வளர்ந்துவிட்டது 
இங்கே திறமைகள் எல்லாம் 
திண்ணை கல்வியில் மழுங்கி ஒடுங்கி விட்டது
ஒடிந்த தேசம் நிமிர்ந்திட 
ஓங்கிய சுயநலம் தகர்ந்திட 
பசித்த வயிறெல்லாம் புசித்திட 
பச்சை வயலெல்லாம் செழித்திட 
அறியாமை இருள் அகன்றிட 
அந்நிய மோகம் அறுபட 
உறவுகள் உயரமாய் பறந்திட 
உணர்ச்சிகள் உருவம் கண்டிட 
கல்வி மட்டுமே வழியடா
இதை கருத்தில் புகுத்தி 
நினைவில் நிறுத்தி 
செயலில் திருத்தி நடத்தடா...
கல்வி எதையும் செய்யாது- அதை 
கற்றவனால் தான் சாத்தியம்
பணத்தால் செழித்தவன் பசி அறிய மாட்டான் 
வெறும் பாடம் மட்டும் படித்தவன் 
நிலை அறிய மாட்டான் 
வாய் பேச்சாய் இருக்கும் வல்லரசு திட்டம் 
நாம் வாழும்போதே தேசம் அடைந்திட 
பஞ்சத்தில் திளைத்த ஏழைக்கு 
பசியில் சோறு போடு,
வளம் இருந்தும் வருந்தும் நம் நாட்டுக்கு 
கல்வி போடு 
ஆம்., 
முதலில் ஏழைக்கு எழுத்தறிவி- பின் 
இந்தியா எடுக்கும் புதுப்பிறவி! 

No comments:

Post a Comment