Sunday, December 16, 2012

கைபேசி என்றொரு காதலி

இரட்டை சிம் கொண்ட என் முதல் மனைவி...

நான் சொல்வதை எல்லாம்
மொழிப்பதிவு செய்யும்- என்
முதல் மாணவி.

என் காதலிக்காய் நான்
கொடுத்த முத்தங்களை...
திருடி வெறும் சத்தத்தை மட்டும்
கொண்டு சேர்க்கும் என்
கள்ளக் காதலி!

அதிகமாய் பேசினால்
எரிச்சலடைந்து எச்சரிப்பாள்
'Low  Battery' என்று!
மீறிப் போனால்
மூர்ச்சையடைவாள்
'Switched off' என்று!

யேசுதாஸையும், மைக்கில் ஜாக்சனையும்,
இளையராஜாவையும், எம்.ஜி.ஆரையும்,
பக்கத்தில் அமர்த்தி
பாடச் செய்யும்
கலை சேவகி.

நாட்களுக்குள்
என் ஞாபகங்களை- நான்
புதைத்து வைக்க
"ஜானகி"யாய் வெளிப்படுவாள்
'Reminder' என்று!

 நகர்ந்து நின்றாலும்
நாலடி நகர்ந்தாலும்
தொப்புள் கொடியாய்
தொட்டு கொண்டே இருப்பாள்
'Head phone' வாயிலாக!

தன் நீலப் பற்களால் எனக்காய்
நிறைய சேகரித்து வைத்தவள் 'Bluetooth'.

என் எண்ணங்களையும்
ஏளனங்களையும்
ரகசியமாய்
பரிமாற்றம் செய்வாள்
SMS என்று.

காதலி, எனக்காய்  பாடிய பாடலை
கற்பு கெடாமல் பதிவு செய்வாள்
Voice Recorder ல்.

அண்ணன் குழந்தையும்
தங்கை குழந்தையும்
முத்தமிட்ட
களங்கமில்லா எச்சில்களை
இவள் கண்ணடித்து
சேமித்து வைப்பாள்
'Camera' வில்.

"இன்னும் தூங்காம என்னடா பண்ற?
அந்த செல்லை ஒடைச்சு எறிஞ்சாதான்
  நீ ஒழுங்கா இருப்ப" : என் அம்மாவுக்கு பயந்து
 என் போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் குட்டி ராட்சசி...

பேசகூடாது என்று நான் இட்ட கட்டளையை மீறாமல்
தொடர்புகளின் தொந்தரவை
அதிர்வுகளால் தெரிவிப்பாள்
தன்னை பூகம்பத்தில் ஆழ்த்திக்கொண்டு
'Vibrate mode'.

இந்த கள்ளக் காதலி உதவியால்
கரம் பிடித்தேன் காதலியை
தாலி கட்டும் போது  உரக்க கத்தி ஊரையே
கூட்டிவிட்டால் ...  'Incoming Call'.

இன்று பள்ளியறையில் நண்பனின் வாழ்த்துக்கு
 நன்றி SMS செய்து கொண்டிருக்க...
பக்கத்தில் இருந்த மனைவி எரிச்சலில்...
இந்த  செல்லையே  கட்டிக்கிட்டு அழுவுங்க.,
நான் தூங்கறேன்...
கண்ணடித்தாள் என் கள்ளக் காதலி.

Sunday, August 12, 2012

என் தேசம் உயர்ந்துவிடும்!


என் தேசம் உயர்ந்துவிடும் 
ஒவ்வொரு இளைஞனும் 
உழைக்க தொடங்கிவிட்டான் 
என் தேசம் உயர்ந்துவிடும்.

பகலில் பள்ளிக்கூடம் சென்று 
பாடப்புத்தகம் புரட்டுபவன் 
இரவில் எச்சில் இலை எடுத்து 
வியர்வை சிந்தி உழைக்கிறானே 
அதனால் சொல்கிறேன் 
என் தேசம் உயர்ந்துவிடும்.

பெண்களை வர்ணித்தே பொழுதை போக்கியவன் 
இன்று சமுதாயத்தை எழுதுகிறானே 
அதனால் சொல்கிறேன் 
என் தேசம் உயர்ந்துவிடும்.

பணத்தை மட்டும் தேடியவர்கள் 
இன்று படிக்கவும் சொல்கிறார்களே 
அதனால் சொல்கிறேன் 
என் தேசம் உயர்ந்துவிடும்.

சினிமா நடிகனைப் பார்த்து 
என் தலைவன் வழி நடப்பேன் என்றவன்
சிறகை விரித்து சிந்தித்து 
விஞ்ஞானியை போல் வருவேன் என்றானே 
அதனால் சொல்கிறேன் 
என் தேசம் உயர்ந்துவிடும்.

நண்பேன்டா...



மழையை கேட்டேன்
மண் என்றது...

மரத்தை கேட்டேன் 
காற்று என்றது... 

இரவைக்  கேட்டேன் 
நிலவு என்றது...

இலையைக் கேட்டேன் 
தண்டு என்றது... 

கடலைக்  கேட்டேன் 
அலை என்றது... 

கரும்பைக் கேட்டேன் 
இனிப்பு என்றது... 

அப்படி என்ன உங்களுக்குள் என்றேன்.,
"நட்பு" என்றன... 

ஆமாம், எங்களை கேட்கிறாயே 
உனக்கு யார் என்றன... 

உலகமே இருக்கிறது என்றேன்...

கருப்பு ராணி





அதோ குயில்...
கருப்பு ராணி!!!
குரலிலே போதை தரும்
 போதை பொருளே!
அபீனைப் போல என்ன
 இனிமை உன் குரல்! 
கஞ்ஜாவினை உறிஞ்சிய போது கூட
 நான் உணரவில்லை
 உன் குரல் போல் சுகத்தை...
நான் புகையைத்தான் உள்ளிழுத்து   
வெளிவிட்டேன் எனக்கு சிறு நிம்மதி... 
நீ காற்றை உள்ளிழுத்து 
கானமாக வெளிவிடுகிறாயே 
அதில் தான் உன் நிம்மதியோ?
எத்தனையோ பெண்களை
 போல் குரலினிலே
என்று வர்ணித்தேன்...
உன்னை வர்ணிக்க
 இன்று தான் எண்ணம் வந்தது. 
நான் கூட கருப்பு என்று
 ஏங்கிய நாட்கள் உண்டு...
உனக்கு அந்த தாழ்வு மனப்பான்மையே கிடையாதா???
ஆண்டவன் என்ன
 அரசு ஊழியன் ஆகிவிட்டானா? 
உன்னிடம் மட்டும் லஞ்சம் வாங்கி
 குரலை அழகாய் கொடுத்துவிட்டானே!
யாரிடம் பயிற்சி எடுத்தாய்?
உன் பாடசாலை எங்கு இருக்கிறது? 
ராகங்களை சமைத்தது நீதானா?
பாவி 
கேட்டு கேட்டு தொண்டை வற்றி 
என்னால் பேசவே முடியவில்லை., 

 நீ மட்டும் கூவிக்  கொண்டே இருக்கிறாயே?

ஓஹோ...

பதில் சொல்கிறாயா? 
மன்னித்து விடு...
என்னால் புலம்பத்தான் முடியும் 
புரிந்து கொள்ள முடியாது 
ஏன் என கேட்கிறாயா? 
ஆம்., 
நான் மனிதன்...

Thursday, February 2, 2012

புரியவில்லை

புரியத்தான் எழுதுகிறேன்
புரியாமல்
நாம் புரிந்து புரிந்து  
அறிந்ததெல்லாம்
இன்று நமக்கு ஏனோ  
புரியாமலேயே போய்விட்டது

நாம் புரியாது என்று  
புறந்தள்ளி வைத்ததுதான் இன்று
புரிய புரிய தொடருகிறது...
நாம் புரிந்து மறந்தவையும்
மறந்து பின் புரிந்தவையும்
நம்முள் அடங்கும்
இதை புரிந்துதான் கூறுகிறேன்.
புரியாமல் போனால்
                             புரிய முயற்சி செய்
புரிந்து விட்டால் மறக்க முயற்சி செய்

நான் மறக்கச் சொன்னது இந்த சங்கதியைத்தான்
இந்த சந்தர்ப்பவாதியை அல்ல...

நானும் கனவும்

நான் உறங்கும்போது விழித்திருந்த சமயம்,
நான் நடந்து வந்த பாதையின் சுவடுகளில் ஏதோ ஒரு சுதந்திரம்!
அது இஷ்டத்திற்கு அங்கும் இங்கும் ஆட்டம் போட்டது...
நான் உற்று நோக்கிய திசையெல்லாம் பனித்துகள்கள்.,
வாணுக்கும் மண்ணுக்கும் பாலம் அமைத்து கொண்டிருந்தது.
என் செவிகளில் நுழைந்தது கானம்,
அதை என்னால் ரசிக்கத்தான் முடிந்தது,  
அதைப் பாட எனக்கு ஞானமில்லை.
அங்கு நல்ல நறுமணம் வீசியதால் என் மீது கூட பாரிஜாத வாசனை!
அங்கு நான் பேசியதை விட அந்த நறுமணத்தைத்தான்  அதிகம் நுகர்ந்தேன்...
நானும் மனிதனாயிற்றே பேசத் துவங்கினேன்...
என்ன ஆச்சர்யம்!!!
அழகுத் தமிழில்!!!
அசரும்படி பேசினேன்
அதில்
அதிசயம் என்ன தெரியுமா???
நான் பேசியது உண்மையை மட்டும் தான்!!!  
அது என்ன இடமோ தெரியவில்லை,
அங்கு உழைக்கவே வழி இல்லை,
ஆனால் ஓசிச் சோறு சுடச் சுட...
அருமையான சாம்பாரு,
அதுகூடவே இரசமும் சோறு,
அப்பளம், கூட்டு, பொரியல் கூட
அல்வா இலையில் நெய்யில் ஆட...
பாசிப்பருப்பு பாயாசம்,
ஏனோ எனக்கு ஒன்னும் புரியவில்லை,
உண்ட ஏப்பம் மட்டும் இன்னும் அடங்கவில்லை.,


 
யோவ்....                              
எந்திரி...எந்திரி....

 








 


 


 
பார்க் பூட்ட நேரமாயிடுச்சு...                        


ச்சே! பாவி மகன்
தூக்கத்தில் கூட நிம்மதியாயிருக்க விடமாட்டிங்கறான்...




ஆசை

தாயோடு விளையாடி அவள் சேலையில் ஒளிந்து கொள்ள.,
நெய்யூற்றி சோறு பிசைந்து நிலாச்சோறு நான் உன்ன 
                                                                                                   ஆசைப்படுகிறேன்...

நேசம் நிறைந்த நட்போடு நாளெல்லாம் ஊர் சுற்ற ...

அணுவுக்குள் அணுவைத் தேடி ஆராய்ச்சி மேற்கொள்ள 
                                                                              ஆசைப்படுகிறேன்...

குற்றாலம் அருவியிலே தினமும் நீராட.,
நீரோடை மேலே என் பாவங்கள் கரைந்தோட ஆசைப்படுகிறேன்....


செங்கற்கள் துகள் அள்ளி பல் துலக்கி வாய் கழுவ.,
சேற்று வயல் நடந்து நான் நாற்று நட ஆசைப்படுகிறேன்...

நடுங்கும் குளிரில் அவளுடன் நெருப்பை கட்டி அணைக்க.,
சிறுவர் குழாம் நானும் பம்பரம் சுற்ற ஆசைப்படுகிறேன்...

ஆடுகள் பல ஓட்டி ஹேய் ஹேய் என்று சொல்ல.,
அழகாய் அதனுடன் பழைய சோறு நான் தின்ன
                                                                                  ஆசைப்படுகிறேன்...

தங்கைக்கு சடை பின்னி காதோரம் பூ வைக்க.,
நான் தாயோடு மடி சாய்ந்து கண்ணீர் விட ஆசைப்படுகிறேன்...

காதலோடு நட்பிலும் பேதமின்றி நடந்து கொள்ள., 
காதலோடு நட்புக்கும் எடுத்துக்காட்டாய் நான் இருக்க...
                                                                                             ஆசைப்படுகிறேன்...





Friday, January 20, 2012

இந்தியா: என் கனவில்

நித்திரையின் கனவுதான்- இவை
நிஜமான ஆசை தான்...
கனவில் கண்ட என் நாட்டில்...  

களவு இல்லை கணம் கூட,  
அங்கு  
கோட்சேவே காந்தியானார்,
காந்தியோ கடவுளானார்...
கங்கை  தமிழ்நாட்டில் கரை புரண்டு ஓடுகிறது,
காவிரி கல்கத்தாவில் காட்டாறாய் பாய்கிறது...
லஞ்சத்தை  தேடினேன்,
வஞ்சத்தை தேடினேன்,
மிஞ்சியது அலைச்சல் மட்டுமே...
நட்சத்திரமாய் இருந்த முன்னேற்றம்,
நகக்கண்ணாய் ஒட்டிவிட்டது-என் நாட்டுடன்.
தெய்வங்கள் பற்பல,
சாதியில்லை பேதமில்லை,
சம்பிரதாய சடங்கில்லை,
பசி என்ற சொல்லே கிடையாது,  
பரதேசியை பார்க்க முடியாது,
பாமரனுக்கும் சிம்மாசனம்,
பாவிக்கும் பேரன்பு,
துரோகிக்கு மட்டும் தூக்கு தண்டனை,
வழக்குகள் தங்கா நீதிமன்றங்கள்,
வாய்ப்புகள் குறையா வேலைகள்,
பிறப்பில் தாழ்வில்லை பிரிவினை வாதமில்லை,
கட்சிகள் இரண்டு மட்டும், காட்சிக்கு அதிசயம் குறைவில்லை,              
எத்தனையோ கோவில்கள்,
அத்தனையும் பள்ளிக்கூடம்!
எத்தனையோ வியாபாரம், 
அத்தனையிலும் முன்னேற்றம்!
என் நாட்டில்
தினமும் மனிதர் புதியதாய் பிறக்கிறார்,
திறமை  உள்ளோர் மட்டும் இருக்கிறார்...
மருத்துவத்திலும் முன்னேற்றம்,
வானத்திலே எழுதப்பட்டுள்ளது ,
இந்தியா வல்லரசு  என்று...
போலிச்சாமி தொல்லையில்லை,
போர்கள் என்றச் சொற்களில்லை,
யாவுமே அமைதி எதிலுமே சமரசம்...
ரசிகர் மன்றம் ஒன்றில்லை,
ரகளை கலவரம் காணவில்லை,
ஏழை மட்டுமே அரசியல்வாதி,
மக்களாட்சியில் குறையில்லை,
கள்ள ஓட்டுக்கு ஆளில்லை,
முழுமையான வாக்குப் பதிவு- அதில்
முறையான மந்திரிசபை!
எனக்கும் கிடையாது,
உனக்கும் கிடையாது,
நமக்கு மட்டுமே எதுவும் உண்டு.
இரண்டே இனம்,
இன்பம்  மட்டும்  கொண்டதே...
 என் இந்தியா.



Thursday, January 12, 2012

தனிமை

தனிமை சுகம்,
தனிமை பலம்,
தனிமை ஞானம்.

நீ உன்னையே மறக்க வேண்டுமா?
உலகையே ஒரு புள்ளியாக்கணுமா?
தனிமையில் இரு.

மரணத்தை விலைக்கு வாங்கி,
ஜனனத்திடம் விற்கலாம்.,








நாம் மனிதன் என்பதன் காரணம் அறியலாம்,
ஆழ் கடல் ஆழம் முதல்
அண்டத்தின் தோற்றம் வரை
யோசிக்க வேண்டுமா?
தனிமையில் இரு.

காதலில் குதித்து கானம் பாட,
காதலை வெறுத்து கண்ணீர் சிந்த,
தனிமையில் இரு.

தாயிடம் மகிழ்வாய் பேச வேண்டுமா?
தந்தையுடன் ஓடி ஆடி விளையாடனுமா?
தனிமையில் இரு.
  
ஆம்...
தனிமை சுகம்,
தனிமை பலம்,
தனிமை ஞானம்.

நீ சோதனைகளையே சிந்திக்க சோதனைகள் போதும்,
காதலையே சிந்திக்க பெண்கள் போதும்,

மரணத்தையே சிந்திக்க மரணம் போதும்,
மகிழ்ச்சியை சிந்திக்க வெற்றிகள் போதும்,

உன்னை நீ  நினைக்க,
உன்னை  நீ  நேசிக்க,
உன்னை  நீ  அறிய,
தனிமையில் இரு.

உண்மையாய் சொல்கிறேன்...

தனிமை சுகம்,
தனிமை பலம்,
தனிமை ஞானம்.

வாருங்கள் சிறிது நேரம் தனிமையில் இருப்போம்...

சொர்கத்தை நோக்கி...

ஓ நாணல்களே!
ஒரு முறை தலையாட்டுங்கள்
நான் கவிதை எழுதப் போகிறேன்... 
நாணல்  தலையசைக்க, கையில் கவிதை!

ஓ மேகங்களே!
ஒரு முறை தூறல் போடுங்கள்
நான் நீராட போகிறேன்...
மேகம் மழை தூவ, நீரோடு தேகம்!

ஓ குயில்களே!
ஒரு முறை கூவுங்கள்  
நான் பாட போகிறேன்...
குயில் மகள் கூவ, குட்டி ராகம் என் நாவில்!

ஓ இளங்காற்றே!
ஒரு முறை வீசு
நான் ஓய்வெடுக்க போகிறேன்...
இளமகன் இளைப்பாற, இளங்காற்றின் தாலாட்டு!

ஓ செந்தமிழே!
ஒரு முறை கவிதை சொல்
நான் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்...
செந்தமிழ் கவி பாட, சொர்கத்தை நோக்கி நான்...!

மகிழ்ச்சி

கண்ணோடு கண் பேச,
கரங்களோடு  கரம்  இணையும்  
அந்த நேரம் மகிழ்ச்சி...

கூந்தல் முடி இழுத்து- தலையில் குட்டி
தண்ணீர் துடைத்த
அந்த நேரம் மகிழ்ச்சி...

மழையோடு காவிரியில் மண் அள்ளி
பூசிக்கொண்டு உடல் நனைத்த  
அந்த நேரம் மகிழ்ச்சி...

இரவோடு இரவாக,
இளங்காத்து வரவாக,
இமை மூட தயாராகும் 
அந்த  நேரம் மகிழ்ச்சி...

கை கொண்ட கரியோடு,
கணவனின் சட்டை மாட்டும்
கணிமகளைக்  கண்ட  
அந்த நேரம் மகிழ்ச்சி...

மகிழ்ச்சிகளை குவியலாக்கி,
மலைபோல உருவாக்கி,
ஒட்டு மொத்த தானம்
மழலை அழுத 
அந்த நேரம் மகிழ்ச்சி...